சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள சின்னப் போரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், SCHOOL என்ற தனியார் தொண்டு நிறுவனம் வளசரவாக்கம், ராயபுரம், தேனாம்பேட்டை, மணலி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியது.
அதன்படி, ஆக்சிஜன் கருவி, ஸ்கேன் செய்யும் கருவி, ஹீமோகுளோபின் மீட்டர், ஐஸ் பேக், குளிரூட்டும் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “SCHOOL என்ற தனியார் தொண்டு நிறுவனம் மருத்துவ உபகரணங்களை கொடுத்துள்ளனர். மதுரவாயல் பகுதியில் 3,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் நமக்கு நாமே திட்டத்தின் நூலகம் கட்ட இருக்கிறோம். சென்னையின் பிரதான பகுதிகளில் 90 சதவீத மழைநீர் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது. அதேநேரம், சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அத்துடன் புதிதாக பல பகுதிகளுக்கு மழைநீர் வடிகால்கள் பணி தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ள பகுதிகளில் சேதம் அடைந்திருக்கும் மழைநீர் வடிகால்கள் பணி சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்காதவாறு கணக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிகால்கள் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மண்டலக் குழு தலைவருக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தெருநாய்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் நாய்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பிற்கு பிறகு நாய்களுக்கு கருத்தடை செய்யும் முறை தொடங்கும். இரண்டு மாதங்களில் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. நாய்களை வளர்ப்போர் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பெறுவதற்கு வெறும் 50 ரூபாய் தான் கட்டணம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்; சிபிசிஐடி மேல்முறையீட்டிற்கு பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு! - SAVUKKU SHANKAR Cases