சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைப் ஸ்பேஷஸ் நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்குச் சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே. பீட்டரிடம் கேட்டதாகவும், இதற்கு எஸ்.கே. பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து எஸ்.கே. பீட்டர் மீது ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எஸ்.கே. பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி வரை பணப் பரிமாற்றம் நடித்ததாகப் புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா? என அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ்.கே. பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும், வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அமலாக்கத்துறையின் நடவடிக்கை நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எனவே அமலாக்கத்துறையின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம்; கடல் விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள் என்ன?