திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கு பெற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நெல்லை மாநகர் மாவட்டத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில், ஆளுநரின் வருகையைக் கண்டிக்கும் விதமாகவும், காந்தியின் பெருமையைப் போற்றும் வகையிலும் காந்தி பெருமைகளைப் பற்றி பஜனை பாடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த பஜனை, காங்கிரஸ் அலுவலகம் முன்பு உள்ள இந்திரா காந்தி மற்றும் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த பஜனை, இன்றைய தினம் மகாத்மா காந்தி ரௌலட் சட்டத்திற்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த நாள் என்பதால், அதனை நினைவுபடுத்தும் வகையிலும், இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் இந்த பஜனை பாடும் செயலில் ஈடுபட்டுள்ளதாக சங்கரபாண்டியன் தெரிவித்தார்.
மேலும், காந்தியின் பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் சிலர் பேசி வருவதாகவும், காந்தியைப் பற்றி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அவர்கள் அனுமதி இன்றி பஜனை நிகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி, போலீசார் அவர்களை கலைந்து செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். காந்தியைப் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல என்ன தடை உள்ளது என்று கேள்வி எழுப்பிய காங்கிசார், தொடர்ந்து பஜனையில் ஈடுபட்டனர்.