கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் விஏஒவாக லோகநாயகி உள்ளார். இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் விஏஒவாக பணியாற்றிய போது, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 2.50 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக, திருவாடானை பகுதியைச் சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுதொடர்பாக ஹென்றி கஸ்பார் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் (2021) தற்போது கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (VAO) வேலை பார்த்து வரும் லோகநாயகி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஒவாக இருந்த போது, அவரும் அவரது மகன் எழில் பிரபாகரன் இருவரும் சேர்ந்து சுமார் ரூ.2.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டனர்.
பணத்தைப் பெற்ற விஏஒ, எங்களுக்கு தெரியாமல் பணியிடமாற்றம் செய்து திடீரென கோவை வந்துவிட்டனர். நாங்கள் கிட்டத்தட்ட 1 வருடமாக விஏஒவைத் தேடி அலைந்து வந்தோம். அதனைத் தொடர்ந்து, அவர்களது செல்போன் நம்பர் மற்றும் பதிவியை வைத்து தேடும் போது கோவைக்கு டிரான்ஸ்பர் ஆகி, கவுண்டம்பாளையத்தில் இருப்பது தெரியவந்தது.
பின்னர், விஏஒவை தேடி அவர்களிடம் கேட்டபோது, இன்னும் ஒரு மாதத்தில் பணம் தருவதாக தெரிவித்தார். ஆனால் தற்போது, பணம் தரவில்லை. நான் விஏஒ அதிகாரத்தில் உள்ளோன், நீ எப்படி என்னிடம் பணத்தை வாங்கிவாய் எனப் பார்க்கலாம் என்று ஆட்களை வைத்து மிரட்டினார். அதன்பேரில், கோவை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தேன்.
அந்த புகாரின் அடிப்படையில், கவுண்டம்பாளையம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர். அப்போது, அங்கிருந்த போலீசார் லோகநாயகி விஏஒவாக இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாளில் புகார் அளித்திருந்தோம். அதன்படி, கவுண்டம்பாளையம் கோட்டாசியர் அலுவகத்திற்கு விசாரணைக்காக அழைத்தனர்.
முதல் நாள் விசாரணையில், நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர். மறுநாள் சென்ற போது, இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்து விட்டனர். ஆகையால் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம்" என தெரிவித்தார்.
மேலும் அவர் அளித்த புகாரில், தற்போது வரை பணமும் தரவில்லை, வேலையும் வாங்கித் தரவில்லை. பலமுறை பணம் கேட்டும் தர மறுத்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை பெறுவதற்கு போராடி வருவதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியராவது விஏஒ லோகநாயகியிடம் இருந்து தங்களது பணத்தை பெற்றுத் தந்து, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!