சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள் தனது வாக்கினை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் நீலாங்கரையில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
![தவெக தலைவர் விஜய் மீது புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-04-2024/tn-che-01-actorvijayissue-photo-script-7208368_20042024120735_2004f_1713595055_253.jpg)
நடிகர் விஜய் வாக்களிக்க வந்த போது தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் பாதுகாப்புடன் சென்று வாக்குச் சாவடிக்குள் சென்று, வாக்களித்து விட்டு சென்றார். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மீது சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் வாக்களிக்க வரும் போது 200க்கும் மேற்பட்ட நபர்களை அத்துமீறி கூட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மேலும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து, வரிசையில் நின்று வாக்களிக்காமல் போலீசாரின் உதவியோடு தனது வாக்கை விஜய் அளித்ததாகவும், இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜயின் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிகளில் முறைகேடு? வாக்குச்சாவடி முன்பு போராடிய பாமக வேட்பாளர் - ராணிப்பேட்டையில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024