சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் பிரதமர் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதாகவும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதாகவும், வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைத் தலைவர் வீரப்பாண்டியன், "ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசிய கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் மிக இயல்பான ஒன்று. ஆனால், தேசத்தில் பிளவு ஏற்படுத்துகின்ற அடிப்படை மதவாத கருத்துக்கள் என்பது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது. ஜனநாயகத்தின் பிரதானமான பொறுப்பில் இருப்பவர் இத்தகைய கருத்துக்களைக் கூறி தேசத்தை பிளவுபடுத்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது. இதற்கு வலுவான கண்டனத்தை தெரிவிக்கிறது.
வட மாநிலங்களில் எழுகின்ற எதிர்ப்பொழியை திசை திருப்புவதற்காக பிரதமர் பிரிவினைவாத கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை நினைவூட்டும் என்று பிரதமர் பேசி இருப்பது மோசமான கருத்து.
தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான இந்த கருத்துக்களை பிரதமர் மோடி தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்., இளம் பெண்ணுக்கு இதயம் கொடுத்த இந்தியா.. சென்னை மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்! - Pakistan Girl Heart Transplant