வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் வேலூர் மாநகர் பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வேலூர் மாநகரான சத்துவாச்சாரி பகுதியில் உள்ள 27வது வார்டு ஆர்டிஓ சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, திடீரென சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஒருவர், "நீங்கள் எதற்கு இப்போ வருகிறீர்கள்? இத்தனை நாளாக எங்கே போனீர்கள்?
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கும்பிடு போட்டு வாறீங்களே தவிர, எந்த ஒரு நல்ல திட்டமும் செய்வதில்லை. அப்போ எதுக்கு உங்களுக்கு ஓட்டு? ஏழையின் சின்னம் உதயசூரியன் என சொல்றீங்களே, நீங்க பணக்காரராகவும், ஓட்டு போட்ட நாங்க ஏழையாகவும் இருந்து வருகிறோம்.
கட்சிக்காரர்கள் நன்றாக உழைக்கிறார்கள். அம்மா ஐயா என கால்களில் விழுகிறார்கள். தோசை, இட்லி, வடை, பூரி என எல்லாம் சுடுகிறார்கள். எங்கள் வாழ்வாதாரமே வீணாக போய்விட்டது. வேட்பாளர் கதிர் ஆனந்த் சொல்றாரு, ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதால் தான் பெண்கள் பாண்ட்ஸ் பவுடர், ஃபேரன் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்கன்னு. அந்த ஆயிரம் ரூபாய் பெரிய விஷயம் அல்ல. வாழ்வாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும், அதுதான் பெரிய விஷயம்.
அதுமட்டுமில்லாமல், எங்கள் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள், என்னோட உரிமையை நான் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள், பதில் சொல்லாமல் சென்றால் எப்படி” என பேசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு திமுக கட்சியினர், அவர் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார், எங்களை தவறாக கூறுவதை நிறுத்துங்கள் எனவும், நீங்கள் உங்கள் இயக்கத்தோடு வாக்கு சேகரித்து போராடுங்கள் எனவும், இதேபோன்று ரோட்டில் வந்து பேசுவது சரி இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர் நான் நாம் தமிழர் கட்சியில் தற்போது இல்லை எனவும், நான் கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவும், நான் என்னுடைய சொந்த உரிமையைக் கேட்கிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: "பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது" - இயக்குநர் சுந்தர் சி கூறும் அப்டேட்! - Aranmanai 4 Trailer Launch Event