கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்கள் அதிகளவில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவையானது வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இந்நிலையில், இந்த இண்டிகோ விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாகவும், காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அன்று காலை 11.30 மணிக்கு அபுதாபி சென்றடையும். பின் அபுதாபியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குக் கிளம்பி மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் இருந்து இயக்கப்படும் மூன்றாவது சர்வதேச விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீலகிரிக்கு இன்னும் காத்திருக்கு.. கோவையிலும் வாய்ப்பு.. வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!