கோயம்புத்தூர்: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும்போது, "உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. கடந்த 4 ஆண்டு காலத்திற்கு முன்னால், பாஜக அரசினால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் மூலம் கள்ள நிதி பெறுவதற்காக ஏற்பாடு செய்தனர்.
இதை எதிர்த்து மார்க்ஸ்சிஸ்ட் கட்சியும், இதர தன்னார்வலர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வழக்கு தொடர்ந்தனர். நான்கு ஆண்டு காலத்திற்கு பின், இந்த வழக்கு எடுக்கப்பட்டு அரசியல் அமர்வு என்று சொல்லக்கூட்டிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏக மனதாக இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளனர்.
இந்த பத்திர முறை செல்லாது. இந்த பத்திர முறை கருப்பு பணத்தை ஒழிக்க என்பது ஏற்க முடியாது என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. என்ன நிதியாக இருந்தாலும் ஒரு அரசியல் கட்சி வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஆகவே யார் பணம் கொடுத்தார்கள் எந்த முறையில் இந்த பணம் வந்தது என்ற விவரத்தைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தில் இவை அனைத்தும் மறுக்கப்படுகின்ற காரணத்தினால், இந்த திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், இதுவரை என்ன நிதிகளைப் பெற்றிருக்கிறார்களோ அதை முழுவதுமாக மார்ச் 6ஆம் தேதிக்குள் வங்கிகளும், பணம் பெற்றவர்களும் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இவை அனைத்தும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தையும் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இந்தியாவிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த தேர்தல் பத்திர திட்டம் மூலம் எந்த நிதியும் பெற மாட்டோம் என அறிவித்தது.
இதை கடைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல் அதை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்தி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, வெளிப்படைத் தன்மையைப் பாதுகாப்பது, அரசியலில் நேர்மையைப் பாதுகாப்பது என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பதை, கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு இந்த நாளினை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களோடு இணைந்து கொண்டாடுகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய முயற்சி..! தெலங்கானா பெண் கைதானது எப்படி?