மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.10 மணிக்கு புறப்பட்டார். அவருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார். தொடர்ந்து, அவர் மயிலாடுதுறைக்கு இரவு 9 மணியளவில் வந்து சேர்ந்தார். இவ்வாறு ஸ்டாலின் புறப்படும்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலும், வந்திறங்கிய மயிலாடுதுறை ரயில் நிலையத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சரின் மயிலாடுதுறை நிகழ்ச்சி நிரல்: மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அது மட்டுமல்லாமல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற இருக்கிறார். இதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.423.36 கோடி மதிப்பீட்டில் 71 கட்டடப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
அதேபோல், ரூ.88.62 கோடி மதிப்பீட்டில் 40 பணிகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12,653 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என சுமார் 655.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பரையாற்றுகிறார்.
இதையும் படிங்க: "எல்லாத்தையும் இப்பவே கேட்டா எப்படி.. நாளைக்கு மேடைல என்ன பேசுறது?" - அமைச்சர் எ.வ. வேலு பதில்!