தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அனைத்து கட்சியினரும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொள்கையில் அதிமுகவினருடன் கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன். இவர் இன்று (ஏப்.16) பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எர்ண அள்ளி, கக்கஞ்சிபுரம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் பிரச்சார வாகனம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், பாலக்கோடு காவல் நிலையம் அருகே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அங்கு மறுபுறம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிமுகவினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நாம் தமிழர் கட்சி வாகனத்தின் மீது கல் வீச்சு நடந்தாக கூறப்படுகிறது. இதில் பிரச்சார வாகனத்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து நாதக வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன், நாங்கள் முறையாகத்தான் அனுமதி பெற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த தகராற்றால் எங்கள் வாகன முன் பக்க கண்ணாடி உடைந்துள்ளது. தங்களுக்கு நியாயம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 'விசில் போடு' பாடல் சர்ச்சை.. விஜயின் 'கோட்' படத்திற்கு எதிராக புகார்! - WHISTLE PODU SONG ISSUE