தஞ்சாவூர்: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர் சுதாவிற்கு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று நண்பகல், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் முன்னிலையில் சிஐடியூ தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தர்ராஜன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நம் நாட்டை பிடித்துள்ள பீடையை, சனியனை அப்புறப்படுத்த வாக்காளர்களாக நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் நடவடிக்கையால் அளிக்கும் வாக்குகளால் தகுதியான நபரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பி வைக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆண்ட கடந்த 10 ஆண்டுகள் என்பது தொழில்கள் செத்த ஆண்டு, விவசாயம் செத்த ஆண்டு, ஜனநாயகமும், சுதந்திரமும் செத்த ஆண்டு, கலாச்சாரம், பண்பாடு செத்த ஆண்டு.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் இருண்ட காலமாக, மோடியின் 10 ஆண்டுக் காலம் வரலாற்றில் இடம் பெறும். இந்த தேர்தலுடன் இந்தியாவைப் பிடித்துள்ள மோடி என்ற கிரகணம் விலகி வெளிச்சம் பெறும்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தொடக்கத்தில் முழக்கமிட்டு வந்தவர்கள் தற்போது பல்வேறு கருத்துக் கணிப்புகளில் 200 தேறுவதே கடினம் என வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதிமுக தமிழக மக்களுக்குப் பாதகமான சட்டங்கள் கொண்டு வர, எடப்பாடி தலைமையிலான அதிமுக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வு, சிஏஏ சட்டம் என அனைத்து பாதகமான சட்டங்களைக் கொண்டு வர காரணமாக இருந்து விட்டு இன்று நல்லவர்களைப் போல, நாங்கள் தனித்து வந்துவிட்டோம் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதே போல பாமகவும், 10 சீட்டு மற்றும் மாநிலங்களவை சீட்டு என்ற தேர்தல் நேரக் கூட்டுப் பேரத்தில் ஒற்றை கொள்கை கொண்டவர்கள். ஒரு வேளை பாஜக ஆட்சி அமைத்தால் அதில் மகன் அமைச்சராக வேண்டும் என்பது என சாடிய சௌந்தர்ராஜன், உலகிலேயே யார் போட்டியிட அதிக இடங்கள் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பது அற்புதமான கொள்கை.
இதுபோன்ற கொள்கை உலகில் யாரிடமும் இருக்காது என்றும் பாமகவைச் சாடிய அவர், தேச ஒற்றுமைக்கு உலை வைக்கும் கட்சி, ஒற்றுமையைக் காப்பாற்ற முடியாத கட்சி, இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நாம் வரிந்துகட்டி நின்று நம்முடைய வாதங்களை வாக்காளர்களாகி உங்கள் முன் வைக்கிறோம் என்றார்.