மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று கொடியேற்றம் நடைபெற்ற நிலையில், இனி வரும் நாட்களில் காலை, மாலை என இருவேளைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய விழாக்களான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வரும் 19ஆம் தேதியும், திக் விஜயம் 20ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21ஆம் தேதியும், 22ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, மற்றொரு பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 22ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர் சேவையும், 23ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுகிறது.
இதனையடுத்து, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறும். வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். இறுதியாக 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண, ஆற்றின் இருகரைகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை வைகை ஆற்றில் மதுரை மாநகராட்சி, தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜேந்திர சோழனுக்கு சிலை..படிக்க கோச்சிங் சென்டர் - அரியலூரில் பாஜக வேட்பாளரின் வாக்குறுதிகள் என்ன? - Lok Sabha Election 2024