சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் செல்போனுக்காக குழந்தையை கடத்திச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து 3 மணிநேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்தலா சன்னி. இவர், குடும்பத்தினருடன் நாகப்பட்டினம் சென்று விட்டு, மீண்டும் தெலங்கானா செல்வதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்துள்ளனர். அங்கு பயணிகள் காத்திருப்பு அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நிலையில், சிந்தலா சன்னியின் மனைவி அவரது குழந்தையுடன் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தையிடன் செல்போனைக் கொடுத்து விட்டு வெளியில் நிற்க வைத்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தை தனியாக இருப்பதை பார்த்த மர்மநபர் குழந்தையின் கையில் இருந்த செல்போனை திருடுவதற்கு திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார். குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிந்தலா சன்னி, இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை மையமாக வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் குழந்தை ஒன்று தனியாக நின்று கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த பேசின் பிரிட்ஜ் போலீசார் குழந்தையை மீட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, எழும்பூர் ரயில்வே போலீசார் மற்றும் சிந்தலா சன்னி ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று, குழந்தையை பெற்றனர். பிற்பகலில் கடத்தப்பட்ட குழந்தையை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு 3 மணிநேரத்தில் மீட்டுள்ளனர். மேலும், கடத்திய நபர் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பி ஓடிய திருடனை எழும்பூர் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மின்சார ரயிலில் பேஷன் பிரிட்ஜ் அழைத்துச் சென்ற திருடன், செல்போனை பறித்துக் கொண்டு குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டு சென்றுள்ளது தெரியவந்தது. செல்போனுக்காக குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற 5ஆம் கட்ட தேர்தல்; உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்கள் முழு விவரம்! - Lok Sabha Election 2024