சென்னை: தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராகுபதி, ராமசந்திரன், கயல்விழி செல்வராஜ், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், சி.வி.கணேசன், மெய்யநாதன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு ஆ.ராசா, கனிமொழி, கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “பெரியாரின் பிறந்தநாளில் பகுத்தறிவு கொள்கைகள், ஆணாதிக்க சிந்தனை போக்குதல், பெண்ணடிமை தனத்தினை ஒழித்தல், சமூகத்தில் வளரும் சாதிய வேறுபாடுகளை ஒழிக்கும் மகத்தான கொள்கைகளை மேம்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.
இதையும் படிங்க: சமூகநீதிப் பாதையில் பயணம்.. பெரியார், மோடிக்கு விஜய் வாழ்த்து!
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் சொந்த கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோயில்கள் மற்றும் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. பல தனியார் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்க பாதுகாப்புக்கு வருகிறது.
தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மீனவர்கள் கடலில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். தற்போது மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு அசிங்கப்படுதப்படும் அட்டூழியத்தில் சிங்கள ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், தமிழக மக்களும் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவந்தாலும் ஒரு சிறிய துரும்பை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து அவமாப்படுத்தியதற்கு கண்டித்து வருகின்ற 20 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும்… pic.twitter.com/TEhi2IqueV
முதல்வர் ட்வீட்: இந்நிலையில், பெரியாரின் பிறந்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம். இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம். ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி” எனப் பதிவிட்டுள்ளார்.