சென்னை: வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023 டிசம்பர் 25ஆம் தேதி தனிப்படை போலீசார் இருவரையும் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனவும், குடும்ப உறுப்பினர்போல பணிப்பெண்ணை நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு, பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், பணிப்பெண்ணின் கல்விச் செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளதாகவும், எம்.எல்.ஏ மகன் என்பதால், இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை டி.எஸ்.பி அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டது. இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் எனவும், வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில், ஒரு ரூபாய் கூட சம்பளமாக வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
போக்சோ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கூறிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருப்பதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் காவல்துறை சார்பில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!