சென்னை: சென்னை தி.நகரைச் சேர்ந்த ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனரான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் தனது நிறுவனத்தின் சார்பில் வா டீல், மெல்லிசை, புரியாத புதிர், தரமணி, சிவப்பு எனக்கு பிடிக்கும், அண்டாவைக் காணோம் ஆகிய படங்களை தயாரிப்பதற்காக சினிமா பைனான்சியரான ககன் போத்ராவிடம் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2.6 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த தொகைக்காக சதீஷ்குமார் வழங்கிய 35 லட்சம், 45 லட்சம் மற்றும் 27 லட்சத்துக்கான வங்கி காசோலைகள் அவர் வழங்கினார். சதீஷ்குமார் கொடுத்த காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியதால், சதீஷ்குமார் மீது ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் திரைப்படத் தயாரிப்பாளரான ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும், மேலும் கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை எதிர்த்து ஜெ.சதீஷ்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் தண்டனை ரத்து செய்யவும், நிறுத்திவைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெ.சதீஷ்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும், பிரதான மேல்முறையீடு வழக்கை 21வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றியும் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பிற்பகல், தயாரிப்பாளர் சதீஷ்குமார் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி முறையீட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி புதிய மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மேல்முறையீடு மனுவில் உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை நீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பதாகவும், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் நேரில் ஆஜராகி 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற வேண்டும்.
மேலும், காசோலை தொகையில் பத்து சதவீதம் தொகையை 60 நாட்களுக்குள் விசாரணை நீதிமன்ற வழக்கு எண்ணில் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீதான மோசடி வழக்கு: வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் டென்சனான நீதிபதி!