சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.
இந்த குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்ததார். இந்நிலையில், சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று தொடங்கியது.
அப்போது இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் சகோதரர் அசோக் குமாரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சிக் கூண்டில் நின்றவாறு பதிலளித்தார்.
அப்போது, வங்கி தலைமை மேலாளர் அளித்த பதில்கள் சிலவற்றுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அசல் ஆவணங்கள் இல்லை என்றும், சில கூடுதல் ஆவணங்களை தற்போது புதிதாக தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 55வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு