சென்னை: பெண் காவலர்கள் உள்படத் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், கடந்த 4ஆம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் காரிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சிஎம்டிஏ (பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம்) நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கைது செய்த சென்னை குற்றப்பிரிவு போலீசார், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், அவரை அழைத்து வந்த வாகனத்தின் மீது பெண்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: "பாகிஸ்தான் மரியாதைக்குரிய நாடு... அவர்களிடம் அணுகுண்டு உள்ளது" -மணிசங்கர் ஐயரின் கருத்தால் சர்ச்சை! - Mani Shankar Aiyar