சென்னை: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (I.T.I) 2024ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 7 எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இன்று (மே 15) அறிவித்துள்ளார்.
கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் Industry 4.0 தரத்தில் துவங்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியாக 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், ஆண்களுக்கு வயது வரம்பு 40 ஆகவும், பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி காலத்தின் போது வழங்கப்படும் சலுகைகள்:
- கட்டணமில்லா பயிற்சி.
- உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.750
- பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி (Internship) மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன், பயிற்சி முடிந்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in எனும் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 7 ஆகும். மேலும், இது குறித்த சந்தேகங்களுக்கு 044-22501350 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகியும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.