சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 157 பயணிகள் பணித்தனர். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்படத் தயாரானது.
அப்போது, திடீரென விமானத்தின் தலைமை விமானி கேபினில் அவசரகால எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து பரபரப்படைந்த தலைமை விமானி, அவசரக்கால கதவைத் திறந்தது யார் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்கள் விமானத்தில் எச்சரிக்கை மணி இருக்கும் இருக்கைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விமானத்தில் பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அவசர கால கதவைத் திறப்பதற்காக உள்ள பட்டனில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை கிழித்தது தெரிய வந்துள்ளது. இதனால் தான் அலாம் சத்தமிட்டதை அறிந்த விமானப் பணிப்பெண்கள் சிறுவனிடம் எச்சரித்துள்ளனர். மேலும், இது குறித்து தலைமை விமானியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையில், அந்த சிறுவன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதால் தெரியாமல் அதைக் கிழித்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் மன்னிப்பு கேட்ட நிலையில், விமான அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதமும் எழுதிக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சிறுவனை விமானத்தில் பயணிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன் பின்பு அந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கர் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கு புதிய பிளாஸ்டிக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், அந்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோருக்கு அவசரகால வழிக்கு அருகில் ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் மாற்றப்பட்டு, வேறு இருக்கைகள் தரப்பட்டன. இதனால் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னையிலிருந்து கொல்கத்தா புறப்பட்டுச் சென்றது. மேலும், இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: அரியலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் ஜூந்18ல் பொது ஏலம்!