தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இக்கோயில் மட்டும் தான் கடற்கரையில் அமைந்துள்ள முருகனின் ஒரே கோயிலாகும். சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இக்கோயிலில் 'ஆவணி திருவிழா' சனிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை கோயில் வளாகத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சென்னையை சேர்ந்த புகழ் பெற்ற சைதன்யா பரத நாட்டிய பள்ளி மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர்.
சூரசம்ஹாரம்: சிவ பெருமானிடம் இருந்து வரம் பெற்று தேவர்களை அச்சுறுத்திய சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் தன் தாயிடம் இருந்து பெற்ற வேல் கொண்டு அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. சூரசம்ஹாரம் என்ற அழைக்கப்படும் இந்நிகழ்வு முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா போது வெகு சிறப்பாக நடைபெறும். அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது.
அந்நிகழ்வை குறிப்பிடும் விதமாக சைதன்யா பரத நாட்டிய பள்ளி மாணவிகள் முகபாவனையில் நவரசங்களையும் வெளிக்கொண்டு வந்து, முருகன் சூரனை வதம் செய்வதை நாட்டியம் மூலம் எடுத்துரைத்தார்கள். இதனுடன் முருக பெருமானுக்கே உரித்தான காவடி, மயிலாட்டம் இணைத்து ஆடி, மக்களை பக்தி மழையில் நனைய செய்தனர்.
இது குறித்து சைத்தன்யா நடன பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் கலா ரத்னா ஸ்ரீமதி ராஜேஸ்வரி சுந்தரராமன் கூறுகையில், "கடந்த 30 ஆண்டு காலமாக இக்கலைத்துறை பள்ளியை நடத்திக் கொண்டு இருக்கின்றேன். தண்டாயுதபாணி பிள்ளையின் வழிகாட்டுதலின் பேரில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த வந்திருக்கின்றோம். இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடப்பது ஆசிரியர் என்ற முறையில் எனக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல மடங்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என மகிழ்ச்சியுடன் கூறினார்.
பரத நாட்டிய பள்ளி மாணவர் பாலசந்தர் கூறுகையில், "விதவிதமான கலைகள் செய்து இருக்கின்றோம். 100 சலங்கை நடனத்துக்கும் மேல் நிகழ்ச்சிகள் செய்து இருக்கின்றோம். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். தென் தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், தற்போது திருச்செந்தூரிலும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். 14 வருடங்களுக்குப் பிறகு திருச்செந்தூரில் கலை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு காவடி எடுத்து நடனம் ஆடியுள்ளோம். முருகன் மேல் உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக காவடி, மயிலாட்டம் போன்றவற்றை பரதத்தில் இணைத்து அரங்கேறி உள்ளோம்" என உணர்ச்சி பொங்க கூறினார்.
இதையும் படிங்க: ஆவணித் திருவிழா; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றம்!