டெல்லி: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தொடர்ந்து பரந்தூரிலும் விமான நிலைய அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க தேவையான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது.
ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளக் கூடிய வகையில், சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் என அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே டிட்கோ நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு பரந்தூர் விமான நிலையத்தின் தள அனுமதி வேண்டி விண்ணப்பித்தது.
மேலும், தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்து இருந்தது. இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்திற்கான தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி கோரி மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தள அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் நடந்து சென்ற தொழிலாளியை கடித்துக் குதறிய நாய்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்! - dog bite a man in Koyambedu market