சென்னை: மத்திய சென்னையில் பாஜக சார்பாகப் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மத்திய சென்னையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஈடிவி பாரத்திற்குப் பிரத்தியேக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய சென்னை என்பது ஒட்டு மொத்த சென்னையின் நாடியாகச் செயல்பட்டு வரக்கூடிய ஒன்று ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் நான்கு முதல் ஐந்து அடி வரை மழை நீர் குடியிருப்புகளில் தேங்குகிறது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தற்பொழுது இருக்கும் திமுக அரசு பொருத்தவரை பல்லாயிரம் கோடி மழை நீர் கால்வாய்க்காகச் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டுகின்றனர். எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை என பிரச்சாரத்திற்குச் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் என்னிடம் குறைகள் கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ச்சியாகப் பேசிய அவர், "கச்சத்தீவு விவகாரத்தைப் பொருத்தவரை, கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தது காங்கிரஸ் அதனைத் தடுக்காதது திமுக. அதைப்பற்றி இன்று பேசும் போது மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று அவர்களுக்குப் பயம் வருகிறது. ஆகவே இந்த கச்சத்தீவு விவகாரத்தை, குறியீட்டுப் பிரச்சினையாக (Index Issue) பார்க்காதீர்கள் உணர்வுரீதியான பிரச்சினையாக (Emotional Issue) பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "மத்திய சென்னை தொகுதியில் உள்ள மக்களைப் பொருத்தவரை தங்களுடைய மக்களவை உறுப்பினர் யார் என்றே தெரியாத நிலை தான் தற்போது வரை உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் வருவது வாக்குகளைக் கேட்பது பின்னர் வெற்றி பெற்றவுடன் தொகுதி பக்கமே வருவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர். அப்படி இருக்கும் ஒருவர் இந்த முறை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
அதிலும் குறிப்பாக எங்களுடைய பிரச்சாரத்தின் பொழுது மக்கள் உற்சாகத்துடன் எங்களை வரவேற்கின்றனர். முடிந்த வரையில் எங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துதர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். குடிநீர், கழிவு நீர் செல்வதற்கான வசதி, சுகாதாரமான இடம் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
மேலும், குடும்ப அரசியல் நடத்தி வரும் பின்புலத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக இருக்கும் பொழுது மக்கள் மீண்டும் எப்படி அவருக்கு வாக்கு செலுத்துவார்கள்? தமிழக மக்கள் எதையும் எளிதில் மறக்கக் கூடியவர்கள் அல்ல. மத்திய சென்னை மக்களுக்குத் தேவையான வசதிகளையும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் தான் பாடுபடுவேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் பண்பாடு அழிந்துவிடும்" - வாகை சந்திரசேகர் விமர்சனம்!