திருவாரூர்: கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி பகுதியில் உள்ள டவரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ ரிமோட் (ஆர்ஆர் யூனிட்) என்கிற மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் களவு போனது.
இது தொடர்பாக, எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உதவி காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், தமிழ்நாடு முழுவதும் இது போன்ற திருட்டு வழக்குகள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்த போது, விழுப்புரம் மாவட்டத்திலும் இதுபோன்ற வழக்கு பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், விழுப்புரம் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட நபரின் புகைப்படத்தை வைத்து மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, புகைப்படத்தில் உள்ள நபர் திருவாரூர், சேந்தமங்கலம் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரில் வாடகை வீட்டில் தங்கி எலக்ட்ரானிக் பொருட்களை ரயில் மூலம் டெல்லிக்கு பார்சல் செய்வது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வாடகை வீட்டில் தங்கியிருந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார், ரஷித் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் அன்சாரி மற்றும் வாசீம் அன்சாரி என்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாடு முழுவதும் டவர்கள் அதிகம் உள்ள பகுதிகளை தேர்வு செய்து, நான்கு முதல் ஐந்து நபர்கள் அங்கேயே தங்கி, அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பணிபுரிந்து வரும் நபர்களிடம் பழகுவதாகவும், பின்னர் அவர்களின் உதவியுடன் டவரின் உச்சியில் ஏறி, ஆர்ஆர் யூனிட்டை திருடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடிய ஆர்ஆர் யூனிட்டை யாரேனும் ஒருவர் மட்டும் ரயில் மூலம் டெல்லி சென்று 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, மீண்டும் தமிழ்நாடு திரும்பி இதே பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு ஆர்ஆர் யூனிட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.