திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயக்குமாரைக் காணவில்லை என கடந்த 3ஆம் தேதி அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், புகார் அளித்த மறுநாள் திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் கரைசுத்துபுதூரில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு கடந்த 30ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று வெளியாகியது. அதில் மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு, நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு தனக்கு ஏதாவது நேரிட்டால் இவர்கள் தான் காரணம் என எழுதியிருந்தார்.
மேலும், கடந்த 27ஆம் தேதி ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய மற்றொரு கடிதமும் வெளியானது அதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பல்வேறு விஷயங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார். அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஜெயக்குமார் உடல் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு இருந்ததால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஜெயக்குமார் கொலையில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருக்கும் நபர்களிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் உட்பட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் வசிக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தனுஷ்கோடி ஆதித்தனிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் ஜெயக்குமார்தானா என்ற சந்தேகம் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் கருகி இருந்ததால் அடையாளம் தெரியவில்லை எனவும், டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்நிலையில், ஜெயக்குமார் காணாமல் போனதாகக் கூறப்படும் 2ஆம் தேதி இரவு 10 மணி அளவில், கரைசுத்து புதூரில் உள்ள கடை ஒன்றில் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவது போன்ற சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜெயக்குமார் சுமார் இரண்டு நிமிடங்கள் கடையில் நின்று, கடை ஊழியரிடம் பொருட்களை விசாரித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
தற்போது கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜெயக்குமார், கரைசுத்துபுதூரில் உள்ள கடைக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி கடலில் முழ்ங்கி 8 பேர் உயிரிழப்பு! கடல் அலையில் மாணவர்கள் சிக்கியது எப்படி?