திருநெல்வேலி: மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் (ABRY) கீழ் உதவிபெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் நபர் ஒருவர், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) நியமிக்கப்பட்ட அமலாக்க அதிகாரி பி.கபிலன் என்பவர் தன்னிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அமலாக்க அதிகாரி கபிலனை மத்திய புலனாய்வுத் துறையினர் (CBI) இன்று (பிப்.19) கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட அமலாக்க அதிகாரி கபிலன், புகார்தாரரின் நிறுவனத்திடம் இருந்து ஆவணங்களைச் சேகரித்துச் சரிபார்த்ததாகவும், அந்த ஆவணிகளின் மூலம் அந்த நிறுவனம் ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபாய் பெற்றுள்ளதை அறிந்து, அந்த தொகையில் இருந்து கபிலன் புகார்தாரரிடம் இருந்து ஐந்து சதவீதத்தை லஞ்சமாகக் கேட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பினர் கூறியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட EPFO அமலாக்க அதிகாரி கபிலனை சிபிஐ அதிகாரிகள் பொறி வைத்து கையும் களவுமாகப் பிடித்ததாகவும், இதன் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிபிஐ அதிகாரி தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கார் யோஜனா திட்டம் என்பது புதிய ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமாக பல்வேறு துறையில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தமிழக பட்ஜெட்டில் மின் கட்டணம் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது வருத்தம்" - குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் கருத்து!