சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரூ.4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தைக் கொண்டு சென்றதாக சதீஷ், பெருமாள், நவீன் ஆகிய மூவரை தாம்பரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, அந்த பணம் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும், தேர்தல் செலவுகளுக்காக அவரது ஹோட்டலில் இருந்து கொண்டு செல்லப்படுவதாகவும், மேலும் சென்னையில் பல்வேறு நபர்களிடமிருந்து கைமாற்றி கொண்டு செல்வதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் தொடர்புள்ள நபர்கள் குறித்து தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து, அதனை வீடியோ பதிவு செய்தனர். இந்த நிலையில், ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதனை அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி, நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பணம் சென்னை கிரீன்வே சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கை மாறியதாக தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், அந்த ஹோட்டலில் உரிமையாளரும், பாஜக நிர்வாகியுமான கோவர்தன் என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நீலாங்கரையில் உள்ள கோவர்தனுக்குச் சொந்தமான வீடு மற்றும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட இடங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் தாம்பரம் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், ரூ.1 லட்சம் பறிமுதல் செய்திருந்து குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விவரங்கள் குறித்து கோவர்தன் மற்றும் அவருடைய மகனிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி விவகாரம்.. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்!