கோயம்புத்தூர்: கடந்த 2017ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாக இந்த வழக்கு மீதான விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் 9வது குற்றம் சாட்டப்பட்ட நபரான மனோஜ்சாமி என்பவரிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பி.ஆர்.எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ்சாமி ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகசாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக, கடந்த பிப்.1ஆம் தேதி இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான் என்பவருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, சுமார் 7 மணி நேரம் வரை விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது மனோஜ்சாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.