சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு (Cauvery Water Regulation Committee) பரிந்துரையின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை பெறுவது தொடர்பாக, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஒ.எஸ்.மணியன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், விசிக சார்பில் திருமாவளவன், பாலாஜி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் கரு நாகராஜன், கருப்பு முருகானந்தம் பங்கேற்றார், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,"காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.
இது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுக்கும் செயலாகும்" என கூறினார். கூட்டத்தின் முடிவில் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேறியது.
3. தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின் உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 05-02-2007: 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி, வழக்கமான மழைப்பொழிவு காலத்தில் தமிழ்நாட்டிற்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி நீரைக் கணக்கிட்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு 18-02-2018: 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து, கர்நாடக அரசு தரப்பில் 132 டிஎம்சியாக குறைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கர்நாடகத்துக்கு 14.75 டிஎம்சி நீரை கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA): உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளைக் களைவதற்காக மத்திய அரசால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority) அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதியான நீர் வருடத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட நீர்த்தேக்கங்களில் மொத்த, மீத நீர் தேக்கிவைப்பு அளவினை தீர்மானிக்கும்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC): உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி உருவாக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ( Cauvery Water Regulation Committee) காவிரியில் இருந்து கர்நாடக மாநிலம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கிறது. அதேபோல், ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது.
இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு! - MK Stalin on Cauvery issue