சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக படுகொலை வழக்கில் இதுவரை 16 நபர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதில் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சம்போ செந்தில் என்ற ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மூன்று கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சம்போ செந்தில் இதுவரை கைதாகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். மேலும் இந்த சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டுள்ளதால், தனிப்படை போலீசார் இவரை தேடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேர் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற ஒப்பந்தாரை மிரட்டி மாமுல் கேட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்போ செந்தில் அவரது கூட்டாளிகள் சரவணன், மொட்டை கிருஷ்ணன், ஈஷா, எலி யுவராஜ், சிட்டிசன் அருண், முனுசாமி, வசந்த், தமிழ் உள்ளிட்ட 13 நபர்கள் மீது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-07-2024/22025688_card.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: 2 நாள் கஸ்டடியில் எம்.ஆர். விஜயபாஸ்கர்... சிபிசிஐடி தீவிர விசாரணை..! - MR VIJAYABHASKAR Case