சென்னை: தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவருமான டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரிக் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். தனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும் தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய 20 ஆயிரம் ரூபாயில், 10 ஆயிரம் ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்குச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், மீதத்தொகையை மனுதாரர் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:"ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்படும்!" - தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் அதிரடி