சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது நான்கு பேர் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு பட்டக்கத்தியுடன் வந்த மேலும் இருவர், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த பார்த்த போது, அந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம்
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 6, 2024
Read More : https://t.co/5KyF5XghKk#armstorng #ArmstrongDeath #BSParty #Chennai #protest #etvbharattamilnadu pic.twitter.com/dB2tkNgqmE
இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆம்ஸ்ட்ராங்கை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து செம்பியம் போலீசார், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கைப்பற்றி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து 8 தனிப்படைகள் அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆற்காடு பாலா, ராமு, திருவங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 நபர்கள், அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் தாங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சரணடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சரணடைந்தவர்களிடம் கடந்த வருடம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங் பெயரும் அடிபட்ட நிலையில், அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். சரணடைந்தவர்களில் ஒருவரான அருள் என்பவர், "அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலை இரண்டு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன என ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மருத்துவர் தூவாரகேஷ் தலைமையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை வாங்க மறுத்தும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கால் இக்கொலை நடந்ததாக கூறி பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை! - armstrong murder accused