கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று (அக்.2) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகோபால் மதுரை வீரன், நாடாளுமன்ற பொறுப்பாளர் ரவி, மாநிலச் செயலாளர் கருப்பையா, மாநில துணைத் தலைவர் இளமான் சேகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியை வலுப்படுத்துவதற்காக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி, வழக்கறிஞர் ராமச்சந்திரன் மாவட்டத் தலைவராக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக ஜெயகோபால் மற்றும் மருதை வீரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் கருப்பையா பேசியதாவது, “தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்த தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று கரூர் மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பந்தமாக தமிழக காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், “கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கூறியபடி ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு இந்தியாவை ஆள வேண்டும் என ஒற்றைக் கொள்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் கட்சி எப்பொழுதும் தேர்தல் அறிக்கைகளை மட்டும் நம்பி வாக்கு சேகரிக்காது. தனித்துப் போட்டியிட்டு 4 முறை உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி வென்றுள்ளார். கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக இதனைச் சந்திப்போம். தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் கூற முடியாது. இது சம்பந்தமாக மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மூலம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்