தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்னிக்கை ஜூன் 4 அன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தது.
அந்த வகையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, விசிக தொண்டரிடம் பாஜக வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டியிருந்த பாஜக தொண்டர் மொட்டையடித்துக் கொண்டு தனது வேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றியச் செயலாளராக உள்ள இவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் எனவும், இந்தியாவில் 400க்கு மேல் பாஜக வரும் எனவும் விசிக, அதிமுவினரிடம் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியுற்றதால், பந்தயம் கட்டியிருந்த பாஜக தொண்டர் உடன்குடி மெயின் பஜாரில் வைத்து மொட்டையடித்துக் கொண்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, திமுக தொண்டரிடம் அதிமுக வெற்றி பெறும் என்று சவால் விட்டிருந்த அதிமுக தொண்டர் தனது காலில் கத்தியால் கிழித்து தனது வேதனையை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, திரவியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கடந்த 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதில் இருந்து அதிமுக தொண்டராக உள்ள இவர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 10 தொகுதியில் வெற்றிபெறும் என திமுக தொண்டர் ஒருவரிடம் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அவ்வாறு அதிமுக வெற்றி பெறாவிட்டால் “தனது ரத்தத்தை எனது கட்சிக்காக வழங்குகிறேன்” என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து, திமுக தொண்டரிடம் கட்டிய பந்தயத்தை நிறைவேற்றும் வகையில், தனது குதிங்காலில் இரண்டு இடங்களில் சிறியதாக கத்தியால் கிழித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவர், “வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒன்றிணைந்து அனைவரும் செயல்பட்டால் வெற்றி பெற முடியும்” என்றார்.
இதையும் படிங்க: தருமபுரி மக்களவை தொகுதி: வாக்கு வங்கியை தக்க வைத்த பாமக! - கோட்டையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக! - DHARMAPURI ELECTION RESULTS 2024