கரூர்: பாஜக மாவட்ட பட்டியல் அணி நிர்வாகியாக இருப்பவர் ரவி. இவர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் இருசக்கர வாகனத்தை வேகமாக சாலையில் இயக்கியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் சக்திவேலுவை பாஜக நிர்வாகி ரவி தாக்கியதாகவும், இதனால் அரவக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சக்திவேல் சின்னதாராபுரம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பாஜக நிர்வாகி ரவி மீது சின்னதாராபுரம் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து கரூர் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், இதனைக் கண்டித்து கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மாவட்ட தலைவருமான செந்தில்நாதன் தலைமையில், சின்னதாராபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள கரூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.
பாஜக நிர்வாகி ரவி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும், சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், கரூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்தன், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புகார் கொடுத்த சக்திவேல் மீது வழக்கு போடப்படும் என்று கூறியதை அடுத்து, சுமார் 2 மணி நேரம் நடத்திய போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து பேசிய கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் கரூர் மாவட்டத் தலைவருமான செந்தில்நாதன், “பட்டியல் மக்களின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். திமுகவின் தூண்டுதலின் பேரில், பாஜக நிர்வாகி ரவி மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி என்பதாலே வழக்குப்பதிவு செய்யும் நிலை உள்ளது. திமுகவினரின் கைக்கூலியாக காவல்துறை செயல்பட்டு வருகிறது.
சின்னதாராபுரம் காவல்நிலையம் கட்டுப்பட்டில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக திமுகவைச் சேர்ந்த சிலர் மது விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், சின்னதாராபுரம் காவல்துறை லஞ்சம் பெற்றுக் கொண்டு, சட்ட விரோத மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது.
பாஜக நிர்வாகியின் மீது போடப்பட்ட பொய் வழக்கை காவல்துறை ரத்து செய்யாவிட்டால், மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக சார்பில் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்தானத்தின் இங்கு நான் தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது! - Inga Naan Thaan Kingu Trailer