சென்னை : அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "டங்கஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. அப்போது மாநில அரசு வேண்டாம் என தெரிவித்திருந்தாலே போதுமானது. பல மாதங்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்.
அமைச்சர் துரைமுருகன்: இந்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
நயினார் நாகேந்திரன் : மத்திய அரசு துரோகம் செய்வது போல பேசுகிறீர்கள். எங்களை பொறுத்தவரை இதனை தமிழக அரசு முன்கூட்டியே தடுத்திருக்கலாம். சட்டங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்படுவது.
துரைமுருகன்: மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் பாஜக தடுத்து நிறுத்தும் என கூறினீர்கள். எனவே நீங்கள் உணர்ந்து உங்க கட்சியிடம் சொல்லி இத்திட்டத்தை ரத்து செய்ய சொல்லுங்கள்.
நயினார் நாகேந்திரன் : தீர்மானம் கொண்டு வரும்போது மத்திய அரசு.. மத்திய அரசு.. என பேசுகிறீர்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு : மத்திய அரசு என கூறுவது உங்களுக்கு வருத்தமாக இருந்தால் ஒன்றிய அரசு.. ஒன்றிய அரசு... என கூறுகிறோம்.
நயினார் நாகேந்திரன்: ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் கொண்டு வர யார் காரணம்? டங்ஸ்டன் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளோம்.
முதலமைச்சர் : தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா ? இல்லையா? என தெரிவிக்க வேண்டும். வரவேற்கிறீர்களா, இல்லையா? ஒரே வரியில் சொல்லுங்கள்.
நயினார் நாகேந்திரன் : திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.
இதையும் படிங்க : மாநில அரசு அனுமதியின்றி சுரங்க உரிமைகளை ஏலம் விடக்கூடாது - சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்
இதையடுத்து சட்டசபை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "திமுக அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தனி தீர்மானம், திமுக அரசு தனியாக கொண்டு வந்தது கிடையாது. அவர்களின் அலட்சியதை மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்வது முதல் அனைத்து விவரங்கள் திமுக அரசுக்கு தெரியும். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு அப்பகுதியின் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு, இப்போது தனித் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசு தமிழகத்தை திட்டமிட்டு பாழ்படுத்துவது போன்று நாடகத்தை நடத்தி வருகிறது." என்று அவர் கூறினார்.