கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரக் காலம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக,அதிமுக, பாஜகவினர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கோயம்புத்தூர் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஈ.டிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கோவை ஆவராம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரவு 11 மணி வரையில் பிரச்சாரம் செய்திருக்கிறார். தேர்தல் சட்ட விதிமுறைகளின் படி, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது.
ஆனால், இவர்கள் 10.45 மணி வரையிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களும், திமுக கட்சியினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவர்கள் பாஜகவினரால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜகவினர் தோல்வி பயத்தில் இருக்கின்றனர், அவர்களுக்குத் தோற்றுவிடுவோம் என்ற சந்தேகம் வந்துள்ளது.
அதனால், எதாவது ஒரு வகையில், வன்முறையைக் கிளப்பி, தேர்தல் நடப்பதற்கு இடையூறு செய்ய முடியுமா என நினைத்து இப்படிச் செய்கிறார்களோ என எங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான, முதல் வெள்ளோட்டமாக, நேற்று வன்முறை நடைபெற்றது. தேர்தல் ஆணையம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவினர் கல்லூரி மாணவர்களைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துகின்றனர். மேலும், வெளி மாநிலங்களிலும் இருந்து வந்துள்ள நபர்கள் வீடு வீடாகச் சென்று பிரசுரம் கொடுக்கிறார்கள். எதாவது பிரச்சனை என்றால் அவர்கள் ரூபத்தில் தான் வன்முறை ஏற்படும் என்ற ஐயம் எழுந்துள்ளது. கள நிலவரத்தைப் பொறுத்த வரையில், திமுகவிற்குத் திருப்தியாக இருக்கிறது. தமிழக அரசு மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது.
மத்திய அரசுத் திட்டங்களுக்குக் குறிப்பாக, ஜி.எஸ்.டி வரி, சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.