சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், இன்று (மார்ச் 16) பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கும்போதெல்லாம் மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பேசி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
2019-இல் தேர்தல் பத்திர முறையை பாஜக கொண்டு வர முயற்சிக்கும்போது, இது கொள்ளையடிக்கக்கூடிய முயற்சி என்று ராகுல் காந்தி கூறினார். இது வெளிப்படைத்தன்மையை இல்லாமால் ஆக்கிவிடும், தேர்தல் நடைமுறையை சீரழித்துவிடும், ஊழலை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். அதை மீறி, தேர்தல் பத்திர முறையை கொண்டு வந்து, இன்றைக்கு கோடி கோடியாக பணத்தை பணக்காரர்களை மிரட்டி, அடிபணிய வைத்து பாஜக அரசு பணம் வாங்கி உள்ளது.
காண்ட்ராக்ட் மூலம் வரும் சலுகைகளைக் கொடுத்து பணத்தை பெற்று உள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வாங்கி உள்ளனர். உன்மையிலேயே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எப்படி பல கோடி கொடுத்திருக்கும்?
வருமான வரித்துறையினரிடம் இருந்து அவர்களை பாதுகாக்க நஷ்டக் கணக்கை காட்ட வைத்தீர்களா? நஷ்டத்தில் இருக்கும் நிருவனகளுக்கு வங்கியில் இருந்து பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ய வைத்து, அதற்கு கையூட்டாக பெற்றீர்களா என்கிற கேள்விகள் எழும்புகிறது.
சிறிது நாட்களுக்கு முன்பு சிஏஜி அறிக்கை வெளியானது. அதில் பல லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. அதை மூடி மறைக்க, சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு தேவையில்லாத பிரச்னையைப் பேசி மக்களை திசைத்திருப்பி வருகின்றார், பிரதமர்.
நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசிய பிரதமர் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்று கூறினார். அவரைப் பார்த்து நேருக்கு நேராக ஒரு கேள்வியைக் கேட்கிறேன். சீனா ஆக்கிரமிப்பை அகற்றாமல் வாய்மூடி மெளனம் காக்கிறது பாஜக அரசு. 10 ஆண்டு கால ஆட்சியில் உங்கள் அரசியல் சாதுரியத்தின் மூலமாகவோ அல்லது மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பின் மூலமாகவோ கச்சத்தீவை மீட்டு எடுக்க முயற்சி செய்தீர்களா? எந்த முயற்சியும் நீங்கள் செய்யவில்லை" என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “சிறிய வார்த்தைகளை கூறியிருப்பது பெரியவர் மோடிக்கு அழகல்ல”.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு!