திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் புதிய ராக்கெட் ஏவுதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.27) தொடங்கி வைத்தார். இந்த ராக்கெட் ஏவுதளம் நிகழ்ச்சி தொடர்பாக, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழில் கொடுத்த விளம்பரம் ஒன்றில், சீனா நாட்டு ராக்கெட்டின் புகைப்படம், அந்நாட்டுக் கொடியுடன் இடம் பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம், தற்போது பிரதமர் மோடியின் முயற்சியால், தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தற்போது மாநில அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனியார் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், சீனா ராக்கெட், சீனா தேசியக்கொடியுடன் இடம் பெற்றுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என கனிமொழி எம்பி கேட்கிறார்.
திமுகவிற்கு நாட்டின் மீது மதிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். ஏற்கனவே 1967 முதல் 69 ஆண்டு காலகட்டத்தில் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது தொடர்பான கூட்டம், விஞ்ஞானி சதீஷ் தவான் என்பவர் தலைமையில் நடைபெற்றது.
அதற்கு அண்ணாதுரை அமைச்சரவையில் இருந்த மதியழகன் என்ற அமைச்சர் காலதாமதமாக வந்தார். அவர் குடித்து விட்டு வந்துள்ளார். எனவே அத்திட்டம் கைவிடப்பட்டு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராக்கெட் ஏவுதளம் சென்றது. 'ரெடி டு பயர்' புத்தகத்தில் இது தொடர்பான குறிப்புகள் உள்ளது.
அப்போதே தமிழகத்திற்கு விண்வெளி ராக்கெட் ஏவுதளம் வந்திருக்க வேண்டும், இவர்களால் வராமல் போனது தற்போது மீண்டும் ராக்கெட் ஏவுதளம் நிகழ்ச்சியில் இது போன்று நடந்துள்ளனர். இது மத்திய அரசுத் திட்டம், எந்த இடத்தில் ஏவுதளம் அமைத்தால் சரியாக இருக்கும் என ஆராய்ந்து இன்று பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த நேரத்தில் இது போன்று விளம்பரம் கொடுக்கலாமா? இந்தியா கூட்டணிக்கும் நாட்டின் மீது அக்கறை இல்லை. திமுகவிற்கும் நாட்டின் மீது அக்கறை இல்லை. இந்தியா ராக்கெட்டே ஏவவில்லையா? இந்திய ராக்கெட்டின் படங்கள் கிடைக்கவில்லையா?
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே வடக்கு தெற்கு என பிரிவினைவாதத்தைப் பேசி வருகிறார்கள். இதில் அடுத்தவர்கள் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். தற்போது சீனா ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள். எல்கேஜி குழந்தைக்குகூட இந்தியாவின் தேசியக்கொடி எது, சீனாவின் தேசியக்கொடி எது எனத் தெரியும். இதனை தெரியாமல் செய்திருக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்ஷன் என்ன?