சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேதி அறிவிக்கப்பட்டு 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அந்த வகையில், பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாடு வருவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதாவது, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரும் அமித்ஷா ஏப்ரல் 4ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை தொகுதியிலும், 5ஆம் தேதி சென்னையிலும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக பாஜக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் விரைவில் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிய நிலையில், அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா வருவது தேர்தல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது.