ஈரோடு: ஈரோட்டில் மாயாறும், பவானி ஆறும் கூடுமிடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கு முக்கிய நீர்வரத்தாக உள்ளன. தென்மேற்கு மலைப்பகுதியில் மழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மலைப்பகுதி பந்தலூர், கூடலூரில் கனமழை பெய்து வருகிறது. இங்கு பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்து காட்டாறு வெள்ளமாக உருவெடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு 3 அடி உயரம் வரை இருந்த நிலையில் இன்று 7 அடி உயரம் வரை அதிகரித்துள்ளதால் தெங்குமரஹாடா கிராமத்துக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா கிராம மக்கள் சாகுபடி செய்த தக்காளி, வாழை, மிளகாய், வெங்காயம் முதலியவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று 3623 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 6872 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 70.00 அடியில் இருந்து 70.78 அடியாக உயர்ந்துள்ளது. அதில், நீர் இருப்பு 11.28 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி தண்ணீரும், வாய்க்கால் பாசனத்துக்கு 755 கன அடி தண்ணீரும் என மொத்தம் 955 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிங்க: அப்பறம் ராமசாமி எப்டி இருக்க.. தினமும் யானைக்கு ஹாய் சொல்லும் ஓட்டுநர்.. ஈரோட்டில் சுவாரஸ்யம்! - Elephant kind with bus driver