ஈரோடு: "அணை இன்றி முற்றுப்பெறாது நீரின் அழகு" என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் பாசனத்துக்கு பயன்பெறும் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றி வரும் பவானி சாகர் அணை 69 ஆண்டுகள் நிறைவு செய்து 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் அணை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
அணை உருவான விதம்: நீலகிரி மலைப்பகுதியிலிருந்து வரும் பவானி ஆறு, மாயாறு கூடுமிடத்தில் அணை கட்ட வேண்டும் என 1947ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அப்போதையை காலத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த திட்டத்திற்கு பவானித்திட்டம் என பெயரிடப்பட்டு இதற்கான பூர்வாங்கப் பணியை அப்போதையை அரசு துவங்கியது.
மேலும், இப்பகுதியில் உணவு பஞ்சத்தை போக்குவதற்கு அணையின் வலது பகுதியில் 124 மைல் நீண்ட கால்வாய் வெட்டி, முன் பருவத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, மஞ்சள் பயிரிடவும் பின் பருவத்தில் கடலை, எள், பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய பூர்வ பணிகள் துவங்கின.
தொடர்ந்து 1948ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி ரூ.10 கோடி செலவில் அணைக்கான கட்டுமானப் பணி துவங்கப்பட்டு, இதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷட்டர்கள் பயன்படுத்தப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்தக் கட்டுமானப் பணியின் போது அப்பகுதி மக்கள் வீட்டுக்கு ஒருவர் என பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அணை கட்டுமானம்: மேலும் பவானிசாகர் அணை கட்டுமானப்பணியை அப்போதைய பிரதமர் நேரு, சென்னை மாகான முதல்வர் ராஜாஜி போன்ற தலைவர் பார்வையிட்ட பெருமையும் இந்த அணைக்கு உள்ளது. அணையின் மத்தியில் 1,523 அடி கொண்டு கருங்கல் கட்டடமும், இடது புறத்தில் 3 மைல் மற்றும் வலது புறத்தில் 3.5 மைல் என மொத்தம் 5.5 மைல் தூரத்துக்கு மண்கரைகள் அமைக்கப்பட்டன.
இதனால் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணையாகவும், தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணை எனும் சிறப்பை கொண்டுள்ளது பவானிசாகர் அணை. கடல் மட்டத்திலிருந்து 800 அடி உயரத்தில் அணை உள்ளது. அணை அடிமட்டத்திலிருந்து 15 அடி உயரத்தில் 9 ஆற்று மதகுகள் உள்ளன.
85 அடி உயரத்தில் வெள்ள காலங்களில் வெள்ளநீர் வெளியேற்றுவதற்கு 9 மிகை நீர் போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை அணை நிரம்பியபோது இந்த மிகை நீர் போக்கிகள் மூலம் அதிகபட்சமாக 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
பவானிசாகர் அணையால் தமிழகத்தில் வறட்சி நிலவிய காலத்தில் கூட தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. கோடிக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றும் இந்த அணை, காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி இதே நாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த அணையால் 32.8 டிஎம்சி வரையான நீரைத் தேக்கிவைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இங்கு இரண்டு நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளது. ஒன்று பவானி ஆற்றிலும் மற்றொன்று கிழக்குக் கரை கால்வாயிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 50 ரூபாய்க்கு மருத்துவம்.. நெல்லை மக்கள் மருத்துவர் காலமானார்!