வேலூர்: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் செல்ஃபோன் பயன்படுத்த பள்ளிக்கல்வித் துறை தடைவிதித்துள்ளது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இருந்தபடி ரீல்ஸ் வீடியோ எடுத்து, மாணவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
வேலுாரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பொதுத்தேர்வுக்கு பிட் எடுத்து சென்றதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் பதிவிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான ரீல்ஸ் வீடியோவை, வேலுார் அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் வெளியிட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலுார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள், சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே வளைகாப்பு நடத்தியுள்ளனர். வளைகாப்புக்கு தேவையான வளையல், பூ, சந்தனம், பன்னீர் சொம்பு உட்பட எல்லா பொருட்களையும் வைத்து, மாணவிக்கு நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தி போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.
மேலும் மாணவிகள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து அழைப்பிதழ் தயார் செய்து, அதில் வளைகாப்பு நடக்கும் தேதி, நேரம், இடம் என பதிவு செய்திருக்கின்றனர். மேலும் இந்த அழைப்பிதழ் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை ரீல்ஸ் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: LKG மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்; மூக்கில் ரத்தம் வந்ததால் மருத்துவமனையில் அனுமதி.. வேலூரில் நடந்தது என்ன?
இந்நிலையில் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், “எதிர்கால சந்ததியினரின் ஒழுக்கம், வாழ்க்கை முறைகளை நினைத்தால் மனம் பதைபதைக்கிறது. இதுபோன்ற சமூக சீர்கேடான நிகழ்ச்சி நடந்திருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கண்காணிக்கின்றனரா, இல்லையா என கேள்வி எழுகிறது” என்றனர்.
இதுகுறித்து பேசிய ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘ஆசிரியர் பணி என்பது கத்தி மீது நடப்பதுபோல ஆகிவிட்டது. வீட்டில் அடங்காத மாணவர்கள் கூட பள்ளிகளில் ஆசிரியர்களால் அடக்கப்படுவார்கள். ஆனால், இப்போது, எல்லாமே மாறிவிட்டது. மாணவர்களை கண்காணித்து அவர்களை கண்டித்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால் நமது வேலை கல்வி கற்பிப்பது மட்டும்தான். மாணவர்களின் ஒழுக்கத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்ற மனப்பான்மைக்கு ஆசிரியர்கள் வந்துவிட்டனர். இதன் பிறகும் ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போடுவது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி வளாகத்தில் என்னென்ன நடக்குமோ என்ற அச்சம் ஆசிரியர்களான எங்களுக்கும் இருக்கிறது.
இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு பக்தி ஏற்பட வேண்டும். அதுவரை இதுமட்டுமல்ல இதைவிட மோசமான செயல்கள் நடக்கத்தான் செய்யும்” என அவரது என்று வேதனையை வெளிபடுத்தினார்.
அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து வேலுார் முதன்மை கல்வி அதிகாரி மணிமொழியிடம் கேட்டபோது, ‘‘இப்படி ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியானதாக தகவல் கிடைத்தது. இன்னும் நான் அதை பார்க்கவில்லை. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.