ஈரோடு: தேர்தல் அதிகாரிகள் அனுமதியின்றி, கட்சி கூட்டம் நடத்திய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்படக் கட்சியினர் மீது தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக போலீசார் இன்று (மார்.19) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் குறித்தும், அரசியல் கட்சிகளின் நடவடிக்கை குறித்தும் தேர்தல் பறக்கும் படையினர் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து, இன்று (மார்.19) ஈரோட்டில் தனியார் உணவகத்தில் அனுமதியின்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படையினர், கூட்டம் நடத்த முறையாக அனுமதி பெறாததால் கூட்டத்தினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர், தேர்தல் விதிமீறல்கள் குறித்து தாலுக்கா காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்படப் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விதிமீறல்கள் தொடர்பாக ஈரோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">