தூத்துக்குடி: தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 வரை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கடந்த 2006ஆம் ஆண்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து, அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இது தொடர்பான வாதங்களும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (ஏப்.05) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் யாரும் ஆஜராகவில்லை.
மேலும், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாகவும், பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்.. காதலன் தற்கொலை!