சென்னை: சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை (Armstrong Murder Case) செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர்தான் குன்றத்தூர் பெரியார் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த ரவுடி திருவேங்கடம் (33). இவரை காவலில் எடுத்திருந்த போலீசார், பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காவல்துறையினர் விசாரணைக்காக
மாதவரம் ஆடுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ரவுடி திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மாதவரம் ஆடுத்தொட்டியை சுற்றியுள்ள பகுதியில் அவரை தேடிவந்தனர்.
என்கவுண்டர் நடந்தது எப்படி?: இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றியுள்ள காலி இடத்தில் உள்ள ஒரு தகரக் கொட்டகையில் ரவுடி திருவேங்கடம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தகரக் கொட்டகையைச் சுற்றி வளைத்து திருவேங்கடத்தை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாகவும், காவல்துறையினர் தற்காப்புக்காக திருவேங்கடம் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த திருவேங்கடத்தை மீட்டு சிகிச்சைக்காக மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதன் பிறகு திருவேங்கடம் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு! அலறும் அமெரிக்கா!