அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் அருகே உள்ள கோட்டை காடு கிராமத்தில், வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2013ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மேம்பாலம் பணிகள் துவங்கப்பட்டது. இதனையடுத்து, அணுகு சாலை அமைப்பதற்காக 5.25 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டது.
மேம்பாலப் பணிகள் 20 சதவீதம் முடிக்கப்பட்டு, முழுவதுமாக முடிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது குறித்து, மார்ச் 18ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பொதுமக்களை அழைத்து அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கலந்துகொண்டு பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், “இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இடம் அளிக்காத காரணத்தினால் மேம்பாலப் பணிகளை தொடர முடியவில்லை. பொதுமக்கள் நலன் கருதி இந்தியா சிமெண்ட் நிறுவனம் இடத்தை அளிக்காவிட்டால், விரைவில் பல கட்ட போராட்டங்கள் நடைபெறும்” என்று அறிவித்தனர். இதனை அடுத்து, இப்பிரச்சினை தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக, தற்போது அணுகு சாலை பாலம் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: “நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்”.. ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவுரை! - Firecrackers Stock