சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வில், கல்லூரிகளின் பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித்தகுதி மற்றும் மாணவர்களுக்கான செய்முறை பரிசோதனைக் கூடம் போன்றவற்றின் உட்கட்டமைப்பு பொறுத்தே அந்தந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது.
ஒவ்வொரு படிப்புக்கும் கல்லூரியில் இருக்க வேண்டிய கட்டமைப்பை ஏஐடிசிஇ வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளைக் கொண்டே அண்ணா பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொள்கிறது. அந்த கட்டமைப்பு பொறுத்தே கல்லூரிகளில், பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படும்.
ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால் மோசடி என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் கூறுகிறது. சிறப்பு பேராசிரியர்கள், முழுநேர பேராசிரியர்கள் அல்ல.
ஒரு கல்லூரியில் பணிபுரியும் முழுநேர பேராசிரியர் மற்றும் முனைவர்கள் எண்ணிக்கை பொறுத்தே அந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும், அந்த பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.எச்.டி எனப்படும் முனைவர் படிப்பு முடித்தவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் இத்தகைய முனைவர் பட்டம் பெற்றோர் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதால், ஒரே பேராசிரியரின் சான்றிதழை வைத்து பல்வேறு கல்லூரிகள் கணக்கு காண்பிக்கின்றன. இவர்கள் ஒரு சில வகுப்புகளை எடுக்கும் வகையில் சிறப்பு பேராசிரியராக பல கல்லூரிகளுக்கு சென்று வந்தாலும், இவர்களை முழு நேர போராசிரியராக கருத முடியாது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், நேற்று 9 கல்லூரிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 433 கல்லூரிகளில் 2.32 லட்சம் மாணவர்களை சேர்க்கை நடைபெற உள்ளது. அதில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெறுகிறது.
போலியான முழுநேர பேராசிரியர்கள்: 2023-24இல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து இறக்குமதி செய்து ஆய்வு மேற்கொண்டதில், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது. அப்படி பொய்யாக நிரப்பப்பட்ட முழுநேர பேராசிரியர்கள் பணி இடத்தின் எண்ணிக்கை 972. இந்த போலி பேராசிரியர்கள் 224 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
2023-24ல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய இணைப்பு அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குநர் இளையபெருமாள், ஆய்வுக் கமிட்டியின் உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயலர் லட்சுமிநாராயண் மிஸ்ரா, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே வாரத்தில் மீண்டும் ஆய்வு செய்து தரமான கல்லூரிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும், இந்த ஆண்டு முதல் இது போன்று நடைபெறாமல் மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் வரை வரியில்லை.. பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்பு என்ன? - BUDGET 2024