சென்னை: போலியாக பொறியியல் கல்லூரிகளில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிவதாக பகீர் கிளப்பிய அறப்போர் இயக்கம், தற்போது நாகர்கோவில் பொறியியல் கல்லூரியில் முன்னாள் பேராசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருவதாகவும், அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழு நேரில் சென்று அந்த ஆசிரியர் அங்குதான் பணிபுரிகிறார் என உறுதி அளித்துள்ளதாகவும் மீண்டும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “என்ன என்ன கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க. கடந்த 8 வருடங்களாக ஓமன் நாட்டில் வேலை செய்து வரும் தங்கள் கல்லூரி முன்னாள் பேராசிரியரை தொடர்ந்து தங்கள் கல்லூரியில் பணி புரிவதாக ஏமாற்றி வரும் நாகர்கோவில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி.
என்ன என்ன கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க..!
— Arappor Iyakkam (@Arappor) July 26, 2024
கடந்த 8 வருடங்களாக ஓமன் நாட்டில் வேலை செய்து வரும் தங்கள் கல்லூரி முன்னாள் பேராசிரியரை தொடர்ந்து தங்கள் கல்லூரியில் பணி புரிவதாக ஏமாற்றி வரும் நாகர்கோவில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி. அதை விட கொடுமை என்னவென்றால் அவர்… pic.twitter.com/9NQIyii0Dp
அதை விட கொடுமை என்னவென்றால் அவர் அங்கு தான் வேலை செய்கிறார் என்று நேரில் சென்று ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழு. இவர்கள் நாகர்கோவில் சென்று ஆய்வு செய்தார்களா அல்லது ஓமன் நாட்டுக்கே சென்று ஆய்வு செய்தார்களா என்று துணை வேந்தர் வேல்ராஜ் அவர்கள் தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த ஆய்வுக்குழு விவரங்களை துணை வேந்தர் வெளியிட்டால் அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டு விழா நடத்தலாம்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 23 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர், 2023-2024 கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து இறக்குமதி செய்து ஆய்வு மேற்கொண்டதில், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது எனவும், அப்படி பொய்யாக நிரப்பப்பட்ட முழுநேர பேராசிரியர்கள் பணி இடத்தின் எண்ணிக்கை 972 என்றும், இந்த போலி பேராசிரியர்கள் 224 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர் எனவும் கூறியது.
பின்னர், இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பேராசிரியர்களின் பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்த பொழுது, ஒரே பேராசிரியர் 3, 4, 5 என பல கல்லூரிகளில் வேலை பார்ப்பது போல் பெயரை பதிவு செய்துள்ளதும், 2023-2024 கல்வியாண்டில் 91 கல்லூரிகளில் பணியாற்றி வந்த 211 பேராசிரியர்கள் பெயர்கள் வேறு கல்லூரியிலும் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், 2024- 2025ஆம் ஆண்டுக்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்த கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் அளிக்கப்பட்ட பேராசிரியர் பட்டியலில் ஒரே பெயரைக் கொண்ட 470 பேராசிரியர்கள் வேறு வேறு கல்லூரியில் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலைக் கூறிய வேல்ராஜ், கடந்த ஆண்டு 91 கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு மேல் ஒரே பேராசிரியர் பெயர் பதிவு செய்திருந்ததாகவும் தெரிவித்தார்.
தவறை ஒப்புக் கொண்டு உடனடி பதில் அறிக்கை https://t.co/z9nMQiPwiN அளித்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. நீங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் இயக்கம் தொடர்ந்து கண்காணித்து கேள்வி கேட்கும் என்றும்…
— Arappor Iyakkam (@Arappor) July 24, 2024
பின்னர், இதுதொடர்பான செய்தி ஈடிவி பாரத் ஊடகத்தில் வெளியானதை சுட்டிக் காட்டிய அறப்போர் இயக்கம், தவறை ஒப்புக் கொண்டு உடனடி பதில் அறிக்கை அளித்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்-க்கு அறப்போர் இயக்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது எனவும், நீங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் இயக்கம் தொடர்ந்து கண்காணித்து கேள்வி கேட்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் 470 போலி பேராசிரியர்கள்.. என்னதான் தீர்வு? அண்ணா பல்கலை துணைவேந்தர் பிரத்யேக பதில்!